இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி, வெள்ளம், இயற்கை சீற்றங்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறார்கள். பல தருணங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பை அறிந்து, பயிர் செய்யாமல் தவிர்த்து விடுவார்கள். ஆனால், இம்முறை தான் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் அறுவடையை எதிர்நோக்கியிருந்த நிலையில், எதிர்பாராத தருணத்தில் பெய்த மழையால், முதலீடு செய்த மொத்தத்தையும் இழந்து கடனாளிகளாக மாறியிருக்கிறார்கள்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால், குறுவை நெல் சாகுபடி வெற்றிகரமாக அமைந்த நிலையில், இதுவரை இல்லாத அளவில் 15 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. அவற்றில் பெருமளவிலான நெற்பயிர்கள் அண்மைக் காலங்களில் 4 கட்டங்களாக பெய்த மழை வெள்ளத்தால் சேதமடைந்து விட்டன.
நெற்பயிர்கள் மட்டுமின்றி கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நிலக்கடலை, சோளம், கரும்பு, உளுந்து, தோட்டக்கலைப் பயிர்கள் போன்றவையும் முழுமையாக அழிந்து விட்டன. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முழுமையாக சேதமடைந்துள்ளது. பிற பயிர்கள் பயிரிடப்பட்டு மழையைத் தாங்கும் பருவத்தை அடைவதற்கு முன்பாகவே அழுகிவிட்டன. அதாவது காவிரி பாசனப் பகுதிகள், கடலூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இழந்து விட்டனர்.
தமிழ்நாட்டு விவசாயிகள் ஒவ்வொரு பருவத்திலும் விவசாயம் செய்வதற்குத் தேவையான இடுபொருட்களை அவர்கள் கடன் பெற்றே வாங்குகின்றனர். இப்போதும் அவர்கள் நம்பிக்கையுடன் கடன் வாங்கித் தான் சாகுபடி செய்திருக்கின்றனர். விவசாயிகளின் நம்பிக்கையை, ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு முறை பெய்த மழை முற்றிலுமாக சிதைத்து விட்டது.
காவிரி பாசன மாவட்டங்களில் முதல் இரு கட்டங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.600 கோடி இழப்பீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு பெய்த இரு கட்ட மழைகளில் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் கணக்கிடப்படவில்லை. சேதங்களைக் கணக்கிடுவதில் கூட நெல்லுக்கு காட்டப்படும் முக்கியத்துவம் பிற பயிர்களுக்கு காட்டப்படுவதில்லை என்றும், டெல்டா பகுதிகளுக்கு இணையான முக்கியத்துவம் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்றும் உழவர்களிடம் ஒரு வருத்தம் உள்ளது.
அந்த வருத்தம் போக்கப்பட வேண்டும். அனைத்து பயிர்களுக்கும், அனைத்துப் பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பயிர் சேதங்கள் மதிப்பிடப்பட்டு முழுமையான இழப்பீட்டை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு வாங்கியக் கடனுக்கு வட்டியைக் கூட செலுத்த முடியாது என்பது தான் உண்மை. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள்வாங்கிய அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் எந்தவித நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும்.
அதற்காக அரசுக்கு ஆகும் செலவு, அண்மையில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்காக செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்காது. அதே நேரத்தில் உணவு படைக்கும் கடவுள்களின் கண்ணீரை இது துடைக்கும். எனவே, விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து வகையான பயிர்க் கடன்களையும் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கான செலவில் ஒரு பகுதியை மத்திய அரசிடமிருந்து பெற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை