சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை நிறைவு செய்த அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூரில் கரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதையடுத்து, நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் நேற்று காலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வந்தனர்.
இதன்காரணமாக, சுமார் 23 மணி நேர பயணத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய சசிகலாவிற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திவரும் அரசியல் கட்சிகள் இவரது வருகை குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சசிகலா வருகை குறித்து சூசகமாக விமர்சனம் செய்துள்ளார்.
அவரது பதிவில், "தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு" என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார். இவர், சசிகலாவிற்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பினை விமர்சிக்கும் விதமாக இக்கருத்தினை தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.