கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி இரண்டு கட்டங்களாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். அதன்படி இன்று பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில முதலமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.
இரண்டாம் கட்டமாக நாளை மாலை 3 மணியளவில் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருடன் காணொலிக் காட்சி வழியாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா தொற்று 48 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைத் தாண்டி உச்சத்தில் உள்ளது. இதனால் சென்னையில் முழு ஊரடங்கு ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.
நாளை நடைபெறும் பிரதமருடனான சந்திப்பில் தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் இருப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.