சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இந்நிகழ்வின் மூலம் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்நாட்டுகிறார்.
முக்கியமாக, பெங்களூரு - சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3ஆம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, சென்னையில் அமையவுள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, ஒசூர் - தருமபுரி இடையேயான 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும், மீன்சுருட்டி - சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறை ஆகியவற்றின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், போடி முதல் மதுரை வரையிலான ரயில் சேவை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழக ஆளுநருக்கு நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக, ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக உள்பட சில கட்சிகள் புறக்கணித்தன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: நேபாளத்தில் புதிய புத்த மத மையம்- அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி