சென்னை: நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல் 8), சென்னை வருகிறார். பிற்பகல் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் அவர், ரூ.1,260 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் செல்லும் பிரதமர், சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத், தாம்பரம் - செங்கோட்டை இடையே இயங்கும் விரைவு ரயில் சேவைகளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து ராமகிருஷ்ண மடத்தின் 125ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பல்லாவரம் ஆல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர், ரூ.3,700 கோடி மதிப்புள்ள சாலைகளை பயன்பாட்டுக்கு திறந்து வைப்பதுடன், புதிய சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில், பிரதமர் வருகையை முன்னிட்டு, தாம்பரம் மாநகரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. காவல் ஆணையர் தலைமையில் மாநகர காவல் கூடுதல் ஆணையர், 3 காவல் இணை ஆணையர், 13 காவல் துணை ஆணையர்கள், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் உள்பட 4,000 போலீசார் மூலம் 5 அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
பல்லாவரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தின் சுற்றுப்புறங்களிலும், செல்லும் வழித்தடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிரதமர் வருகையை முன்னிட்டு தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்டப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க நேற்று முதல் வரும் 9ஆம் தேதி வரை 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.