பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறு மதிப்பீடு, மறுகூட்டல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்தது.
இதனையடுத்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் மாற்றம் இருக்கும் என கருதி மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விடைத்தாள்களை அரசு தேர்வுத் துறை ஆசிரியர்களை கொண்டு மீண்டும் திருத்தும் பணியை மேற்கொண்டது.
அப்பொழுது சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் விடைத்தாள்களில் அதிக அளவில் மதிப்பெண் மாற்றம் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த விடைத்தாள்களை திருத்திய முதுகலை ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியில் இருந்த முதன்மை கண்காணிப்பாளர் என 500-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத் துறை விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
அரசு தேர்வுத் துறை விடைத்தாள் திருத்துவதற்கான ஆசிரியர்களுக்குரிய கையேட்டில் எச்சரிக்கையும் வழிகாட்டுதலும் வழங்கினாலும் ஆண்டுதோறும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மெத்தனப் போக்குடன் செயல்படுவது தொடர் கதையாகவே உள்ளது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.