சென்னை: சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், "பேச்சு மற்றும் கலைப்போட்டிகளை அனைத்துக் கல்லூரிகளிலும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேச்சுப்போட்டியில் பங்கேற்பவர்கள் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்றை அறிந்து இருக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை மாணவர்களின் திறனைக் கண்டறிந்து தொடங்கி வைத்துள்ளார். மாணவர்கள் விரும்பியதைப் படிக்க ஆசை உள்ளது. ஆனால், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கவில்லை. இதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகளில் பேசத் தொடங்கிய நான் தற்போது வரை பேசுவதை மட்டும் நிறுத்தவில்லை. பேராசிரியராகி மாணவர்களுக்குப் புரியும் வகையில் பாடம் நடத்தினேன்.
இந்தி படித்தவர் நிலைமை?
தற்பொழுது நமது ஆட்களில் சிலர் கேட்கிறார்கள் ஏன் ஸ்டாலின் இந்தியை எதிர்க்கிறார் என்று?. இந்தி படித்தால் மட்டும் வேலை கிடைத்துவிடுமா?. இந்தி படித்தவர் இன்று இங்கு வந்து என்ன செய்கிறான் பானிபுரி விற்கிறான். இந்தியைப் படிக்க வேண்டாம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை. மூன்றாவது மொழியாக எதை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் தவறில்லை. இந்தி திணிப்பை நாங்கள் எதிர்க்கிறோம்" எனப் பேசினார்.
நீட் தேர்வு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்லூரி மாணவர்களின் பேச்சாற்றல் திறமையை அதிகரிக்கும் வகையில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் பேச்சுப்போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.
உக்ரைனுக்கு மருத்துவம் படிக்க மாணவர்கள் செல்வதற்கு காரணமே நீட் தேர்வு தான். தமிழ்நாட்டில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். மேலும் இங்கு அதிக கட்டணம் என்பதால் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் மருத்துவம் படிக்கச் செல்கின்றனர்.
பொறியியல் மாணவர்கள்
உக்ரைனிலிருந்து தமிழ்நாடு திரும்பும் பொறியியல் மாணவர்கள் விருப்பப்பட்டால் இங்குள்ள கல்லூரிகளில் அவர்கள் படிப்பைத்தொடர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து திரும்பிய 21 தமிழ்நாட்டு மாணவர்கள்!