சென்னையில் இன்று (மே.12) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 22 காசுகள் அதிகரித்து 93.84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டர் ஒன்று 87.49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 24 காசுகள் அதிகமாகும்.
கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மே 9ஆம் தேதி 93 ரூபாய் 15 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 86 ரூபாய் 65 காசுகளுக்கு ஒரு லிட்டர் டீசலும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் கடந்த மூன்று நாள்களில் மட்டும் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 67 காசுகள் அதிகரித்துள்ளது.
மே 1ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 92.43 ரூபாயாக இருந்தது. தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை முதலில் 92.58 ரூபாயாக இருந்தது. பின்னர் அது 92.43 ரூபாயாக விலை குறைந்தது.
சர்வதேச சந்தையின் அடிப்படையிலும், போக்குவரத்து கட்டணங்களின் அடிப்படையிலும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், தேர்தல் காலகட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருப்பது தொடர்கதையாகி வருகிறது.
இது, மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விலைமீது உள்ள அதிகாரத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உயராமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது மீண்டும் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலையில் மாநில அரசின் வாட் வரி முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் இன்று (மே.12) பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 68.70 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 65.49 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.