சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று(ஜூலை 14) விசாரணைக்கு வந்தன. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், பொதுக்குழு கூட்டம் நடந்த போது கட்சி தலைமை அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனக் கூறி பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு மனு அளித்தும், போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்காததால் வன்முறை சம்பவம் நடந்துள்ளது.
ஈபிஎஸ் தரப்பு வாதம் : பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கம்ப்யூட்டர், கோப்புகளை எடுத்துச்சென்று விட்டார். கலவரம் ஏற்பட்ட போது தடுக்காமல் காவல்துறை அமைதி காத்ததாகவும், வீடியோ ஆதாரமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அலுவலக சொத்தை பொறுத்தவரை அதன் உரிமை என்பது அதிமுகவிடம் உள்ளது. கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளர் தான் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர். அலுவலகத்தின் உரிமை, சுவாதீனம் தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை என்பதால் பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்தை சீல் வைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனவும் வாதிடப்பட்டது.
பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க கோரியுள்ளார். கட்சி அலுவலகம் தனிநபர் சொத்தல்ல. தற்போது அவர் ஒருங்கிணைப்பாளரும் அல்ல. அவரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீல் வைக்கும் முன் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. கலவரம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், கலவரம் சாலையில் நடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பன்னீர்செல்வம் தரப்பில் கூறுகையில், கட்சி அலுவலகத்தை பூட்டி தங்கள் தரப்பினர் நுழைவதை தடுத்தனர். பொருளாளர் என்ற முறையில் அலுவலகம் சென்றதாக குறிப்பிடப்பட்டது. இருவருக்கும் இடையிலான பிரச்சனையை வேறு வழிகளில்தான் தீர்க்க முடியும். சிவில் நீதிமன்றத்தை நாட இருவருக்கும் அறிவுறுத்தலாம். இயந்திர தனமாக ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
தொடர்ந்து காவல் துறை தரப்பில், ஊர்வலமாக தலைமை அலுவலகம் சென்ற பன்னீர்செல்வத்தை தடுக்க முயற்சித்தும், அவர்கள் கேட்கவில்லை. இது காவல் துறையினருக்கும் - அதிமுகவினருக்கும் இடையிலான தகராறு அல்ல. கட்சியின் இரு பிரிவினருக்கும் இடையிலான பிரச்சனை. 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் முன் நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை (ஜூலை 15) பிற்பகலுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக மோதல் - 'இரட்டை இலை’ சின்னம் முடக்கப்படுமா?