கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு தாக்கல் செய்த மனுவில், “இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை என்ற பெயரில் ஐஐடி வளாகத்தில் உள்ள தெரு நாய்கள், செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய்கள் என, 170 நாய்கள், 90 நாள்களாகக் கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுதந்திரமாகச் சுற்றித் திரிய வேண்டிய நாய்களை சட்ட விரோதமாகக் கூண்டில் அடைத்து வைத்த ஐஐடி நிர்வாகத்துக்கு எதிராக, மிருக வதைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த டிசம்பரில் இந்திய விலங்குகள் நல வாரிய தலைவருக்குப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், ஐஐடி நிர்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரப்பட்டது.
இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு அரசையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, இம்மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. தெரு நாய்களை மனிதாபிமானத்துடன், அக்கறையுடனும் அணுக வேண்டும் எனவும், இரக்க மனப்பான்மையுடன் நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.