சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இயக்கிய ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவ ராஜ்குமார், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இப்படம் வெளியானது முதலே வசூல் ரீதியாக கல்லா கட்டி வருகிறது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ஜெயிலர் படம் தற்போது அதே ரசிகர்களாக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றளவும் ஒரு சில இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் படம் திரையிடப்படுவதாக கூறப்படுகிறது. உலகளவில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ள ஜெயிலர் படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் அவ்வப்போது ஜெயிலர் படத்தின் மீதான ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன. ஜெயிலர் வெளியானது முதல் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்து இருப்பதாகக் கூறி, வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவர் தனது மனுவில், "வன்முறைக் காட்சிகள் நிறைந்த ஜெயிலர் படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் "யுஏ" சான்றிதழை வழங்கி உள்ளதாகவும், வில்லன் கதாபாத்திரம், கூலிப்படையினரை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சுத்தியலால் அவர்களை அடித்துக் கொள்வது போலவும், கதாநாயகன், ஒருவரின் தலையை துண்டாக வெட்டுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கத்தி, ரத்தம், வெட்டு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், 12 வயதுக்கு குறைவானவர்களும் பார்க்கும் வகையிலான "யுஏ" சான்றிதழ் வழங்கி இருப்பது தவறானது என்றும், அமெரிக்காவிலும், லண்டனிலும் வயது வந்தோர் மட்டும் பார்க்கும் வகையில் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்று வழங்கப்பட்டு உள்ளதாகவும் மனுவில் தெரிவித்து உள்ளார்.
ஜெயிலர் படத்திற்கு ஜூலை 27ஆம் தேதி வழங்கப்பட்ட "யுஏ" சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை விக்டோரியா எட்வர்டு ஹால் சங்க முறைகேடு: செப். 4ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை!