கரோனா தொற்றை குணப்படுத்தும் வகையில் 2 டிஜி எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. அதை சந்தைக்கு கொண்டு வரக்கோரி சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " மருந்தின் அனைத்து சோதனைகளும் முடிவடைந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இதை ஒன்றிய அமைச்சர் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாள்தோறும் கரோனா மரணங்கள் நிகழ்ந்துவருவதால் இந்த மருந்தை விரைந்து விற்பனைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மருந்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தபோதும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும் வாதிட்டார்.
இதையடுத்து, கரோனா தொற்றை குணப்படுத்த உலக நாடுகளின் விஞ்ஞானிகள், மருந்து கண்டுபிடிக்க முயற்சித்துவரும் நிலையில், தற்போது கண்டுபிடித்துள்ள மருந்தை, பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்ய அனுமதியளித்து, விற்பனைக்கு கொண்டு வந்தால், மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடியும் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு குறித்து நாளை (ஜுன் 25) ஒன்றிய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ’வாழ்க்கை ரகசியம் இதுதான்’ - ராகுல் பளீர்!