ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் குமார் கடந்த ஒன்பது ஆண்டுகளாக கிண்டி தொழிற்பேட்டையில் செயின் கிராப்ட் என்ற நகை பட்டறையை நடத்திவருகிறார். இங்கு தயாரிக்கப்படும் நகைகளை சவுகார் பேட்டையில் இவருக்குச் சொந்தமான நகைக் கடையில் விற்பனை செய்துவருகிறார்.
இந்த நகைப் பட்டறையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 68 ஊழியர்கள் தங்கி பணியாற்றிவருகின்றனர். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பசூரில் ஷேக், ரீடியோ கமர்க்கர், சர்புந்த் சர்தார், சர்புந்த் மண்டல் ஆகிய நான்கு பேர் புதியதாக பணிக்குச் சேர்ந்தனர்.
தாங்கள் முன்னதாக கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நகை பட்டறையில் பணியாற்றியுள்ளோம். கரோனா காரணமாக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு தற்போது சென்னைக்கு வந்துள்ளோம் எனக்கூறியுள்ளனர்.
ஊழியர்கள் வழக்கமாக நகைக் கட்டிகளை எடைபோட்டு, செயின் செய்ய அனுப்புவது வழக்கம். அதேபோல, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களிடமும் 900 கிராம் எடைக்கொண்ட தங்கத்தை கொடுத்து செயின்களாக மாற்றுமாறு கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த 900 கிராம் எடைகொண்ட தங்கக் கட்டியில் செயின்கள் செய்து அதனை உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு இன்று அதிகாலை பின்பக்கச் சுவர் வழியாக இறங்கி தப்பி ஓடியுள்ளனர்.
இதுதொடர்பாக கமலேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், கிண்டி காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வுசெய்த காவல் துறையினர் வடமாநில கும்பல் தப்பி விடாமல் இருக்க சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைய காவல் துறையினர், விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் அளித்து குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நகைக்கடையில் 5 கிலோ வெள்ளி, 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை!