சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பழனி(42). இவர், கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று (பிப்.14) வீட்டில் இருந்து வேலைக்குப் புறப்பட்ட இவர், திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில் பழனி ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து ஆவடி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் : ரயில் சேவையில் மாற்றம்