சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தமிழ் பேசக்கூடிய நபர் ஒருவர் தாக்கக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக அந்த வீடியோவில், நீங்கள் எதற்கு இங்கே வருகிறீர்கள் என்றும், நாங்கள் தான் இருக்கிறோமே, எனவே நாங்கள் எல்லா வேலையையும் செய்து கொள்வோம் எனவும் வடமாநில இளைஞர்களை தமிழ் பேசக்கூடிய நபர் தகாத வார்த்தையால் பேசி இருந்தார்.
இதனையடுத்து இந்த வீடியோ வைரலான நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்து வந்தது.
எனவே, வடமாநில இளைஞர்களை தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரது புகைப்படத்தை தமிழ்நாடு ரயில்வே காவல் துறை, சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. மேலும் இந்த நபர் பற்றிய விவரங்கள் தெரிந்தால், துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு ரயில்வே காவல் துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (38) என்பவரை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூலித் தொழிலாளி என்பதும், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
இவர் சமீபத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும்போது, விருத்தாசலம் அருகே வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மகிமைதாஸ் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் மகிமைதாஸ் குறித்து துப்பு கொடுத்த நபருக்கு தக்க சன்மானம் தர இருப்பதாகவும் தமிழ்நாடு ரயில்வே காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில இளைஞர்களை ரயிலில் தாக்கிய நபர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு