சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம், கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
கடந்த ஏழு நாட்களில் படம் சுமார் 461 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும், அதில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார் எனவும் கூறப்பட்டது. எனவே, இதற்காக தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: "முதலில் கைதி- 2.. அப்புறம் தான் ரோலக்ஸ்... - லோகேஷ் கனகராஜ்!
இதற்கு பெரியமேடு காவல் நிலையம் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், லியோ படத்தின் வெற்றி விழா எத்தனை மணிக்கு தொடங்கப்பட்டு எத்தனை மணிக்கு முடிக்கப்படும், முக்கிய பிரமுகர்கள் யார் கலந்து கொள்கிறார்கள், 5,000 இருக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும் என காவல் துறையினர் கட்டுப்பாடுகள் விதித்து கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இதற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் இருந்து கொடுக்கப்படும் கடிதத்தின் அடிப்படையில், அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு லியோ பட வெற்றி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அனுப்பப்பட்ட கடிதம் பரிசீலனையில் உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.