சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை அரசியல் சட்டத்தின் 142வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.