சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை 5 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் மாவட்டங்களில் உள்ள நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில், மாவட்டங்கள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டு, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 5ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
காசிமேடு சந்தையில் குவிந்த அசைவப்பிரியர்கள்
இதில் சென்னையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று (ஜூன். 27) ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் காசிமேடு மீன் சந்தையில், மீன் வாங்க குவிந்தனர்.
மேலும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 61 நாள்கள் மீன்பிடித் தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இதனால் அதிகளவில் மீன்கள் வரத்து இருக்குமென சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்கள் வாங்க குவிந்தனர்.
ஏமாற்றம் அடைந்த மக்கள், வியாபாரிகள்
ஆனால், பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் வஞ்சிரம், சங்கரா, பாறை, இறால் போன்ற மீன்களின் வரத்துக் குறைவாகவே காணப்பட்டது.
மேலும் தும்பிளி, நாம்பரை, காரை போன்ற சிறிய வகை மீன்கள் அதிகளவில் வந்துள்ளன. இதனால் அசைவப் பிரியர்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து காசிமேட்டில் வந்திறங்கிய மீன்களில் தும்பிளி மீன் கூடை ரூ.1000, சங்கரா மீன் கூடை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், வஞ்சரம் மீன் கிலோ ரூ.1000, இறால் வகை மீன்கள் ரூ.300 முதல் ரூ.900 வரை விலை போயின.
இது குறித்த விசைப்படகு மீனவர்கள் சங்கச் செயலாளர் விஜயேஷ் கூறுகையில்,
'இன்று (ஜூன் 27) காசிமேடு பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவாகவே காணப்பட்டது. சிறிய அளவிலான மீன்களே அதிகம் வந்திருந்ததால் மீன்களின் விலையும் குறைவாகவே இருக்கிறது. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறோம்.
மேலும் அதிகபட்ச டீசல் விலை இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே டீசல் மீதான வரியை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது பாய்ந்த குண்டாஸ்!