சென்னை: பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா. இவர் மகளிர் சுய உதவிக்குழுவை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மூலமாக, அகில இந்திய டாக்டர் அப்துல்கலாம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மற்றும் பொருளாளர் தர்ஷிணி அறிமுகமாகி உள்ளனர்.
இதனையடுத்து, அவர்களது சங்கத்தில் ஆயிரத்து 100 ரூபாய் சந்தா செலுத்தி உறுப்பினராக இணைந்தால் 0.65 பைசா வட்டிக்கு பணம் கடனாக பெற்றுத் தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அறக்கட்டளை மூலமாக குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் 50-க்கும் மேற்பட்ட நபர்களை இதில் இணைத்துள்ளார் பவித்ரா.
குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் கடன் பெற வேண்டும் என்றும், ஒரு லட்ச ரூபாய்க்கு 2ஆயிரத்து 500 ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்து, பிரான்சிஸ் மற்றும் தர்ஷிணி பணத்தை நேரடியாகவும், ஆன்லைன் (கூகுள் பே) மூலமாகவும் வசூல் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியும், இதுவரை கடன் வாங்கித் தரமால் இருவரும் அலைக்கழித்துள்ளனர். கட்டிய பணத்தை திருப்பி தராமலும், அதுபற்றி கேட்டால் சரியான விளக்கமும் அளிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பவித்ரா சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து கடந்த 11ஆம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர், அளிக்கப்பட்ட புகாரின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி துரைப்பாக்கம் காவல் நிலையத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
மேலும், குற்றவாளியை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் இங்கிருந்து போக மாட்டோம் என்று கூறி ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துரைப்பாக்கம் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களிடம் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திருவிழா ராட்டினத்தில் இருந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி.. பஞ்சாப்பில் நிகழ்ந்த சோகம்!