சென்னை: இந்தியாவில் கரோனா தடுப்பூசி ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வரும் நிலையில், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இல்லாத 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிப்போடும் பணி இன்று முதல் (ஏப்ரல் 1) தொடங்கியிருக்கிறது.
தற்போதுவரை நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 6.5 (6,51,17,896 பேர்) கோடியைக் கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் 30 லட்சத்து 31 ஆயிரத்து 631 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் வசந்தாமணி கூறும்போது,"மத்திய அரசு இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே 45 வயதிற்கு மேல் இணை நோய் உள்ளவர்கள் மட்டும்(சர்க்கரை, ரத்த அழுத்தம்) கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தனர். 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு முக்கியமான காலக் கட்டம். தற்பொழுது இரண்டாவது அலையில் நாம் இருக்கிறோம்.
கடந்த 20 நாட்களாக இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கரோனா தொற்று ஏறுமுகமாகவே செல்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கரோனா வைரஸ் பரவல் தொடர்பைத் துண்டிக்க முடியும். மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தடுப்பூசி போடுபவர்கள் தங்களுக்கும், தங்கள் மூலம் பிறருக்கும் தொற்று வராமல் தடுக்கின்றனர். தடுப்பூசி செலுத்த வரும் மக்களிடம் சமூக அக்கறை இருப்பதையும் காண முடிகிறது. இந்தியாவில் 20 நாட்களுக்குள் மேலும் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், 40 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி வரும். அதன் மூலம் நாம் கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்திவிடலாம்.
கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னர் வழக்கமாக சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், காரமான உணவுகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதனை ஒரு வாரம் தவிர்க்கலாம். புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாதம், பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை போன்றவற்றை மக்கள் எடுத்துக் கொள்ளலாம்.
கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டால் முதல் தவணை போட்டபின்னர், நான்கு வாரங்கள் கழித்து 71 விழுக்காடு வரையில், நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது எனக் கூறியிருந்தனர்.
ஆனால், தற்பொழுது எட்டு வாரங்கள் கழித்து போடும்போது 81 விழுக்காடு வரையில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது எனக் கூறியுள்ளனர். கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை போட்டபின்னர், நான்கு வாரம் கழித்து இரண்டாவது தவணை போட்டுக் கொள்ளலாம்.
தடுப்பூசிப் போட்டுக் கொண்டாலும் தொடர்ந்து முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், ஏற்கெனவே கரோனா வந்தவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படலாம். ஆனால், நோயின் தீவிரம் அதிகளவில் இருக்காது. எனவே வாய்ப்புள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.