இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 4 நாள்களாகக் குறைந்துவந்த நிலையில், நேற்று கணிசமாக அதிகரித்து 482 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச அளவாகும். ஊரடங்கால் கரோனா பரவல் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 10ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த கரோனா தடுப்புச் சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், அடுத்த 5 நாள்களில், அதாவது 15ஆம் தேதிக்குள் நோய்ப்பரவல் குறையத் தொடங்கும் என்று கூறினார். மே 13ஆம் தேதி தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கரோனா சோதனை செய்து முடிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களில் 2,600 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், அதன்பிறகும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றால், நோய்த்தடுப்பு அணுகுமுறையில் என்ன தவறு? எந்த இடத்தில் தவறு நடந்தது? கோயம்பேடு நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், இப்போது வேறு எங்கிருந்து நோய் பரவுகிறது? என்பன குறித்து அலுவலர்கள் கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்.
கரோனா தடுப்பில் முதலமைச்சர் பழனிசாமி காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால், களத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு அலுவலர்களின் நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது. மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் பேசிக்கொண்டிருப்பது நம்பிக்கையைத் தராது; மாறாக சலிப்பை மட்டுமே ஏற்படுத்தும்.
எனவே, இனியும் கரோனா தடுப்புப் பணிகளை வார்த்தைகளில் காட்டாமல், செயலில் காட்ட வேண்டும். சென்னையில் வெகு விரைவில் கரோனா பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி மக்களிடம் நிலவும் அச்சத்தை மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூகப் பரவல் தொடங்கியதா? மாதிரிகளை சேமிக்கும் ஆராய்ச்சி கவுன்சில்