சென்னை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த விடியா அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகிறது. மக்கள் தினமும் துடித்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஸ்டாலின் நடு நடுங்கி கொண்டு இருக்கிறார். அதனை திசை திருப்ப அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்.
சுமார் 15 வருடங்கள் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கியவர் ஜெயலலிதா. அதிமுகவின் இரு பெரும் தலைவர்களும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை. தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றியவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த போது இந்த எடப்பாடி ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்து விடும் ஆறு மாதத்தில் கலைந்து விடும் என்று கூறி வந்த நிலையில், அவர்கள் மூக்கு மேல் விரலை வைக்கும் வகையில் 4 ஆண்டுகள் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தந்தோம். விபத்தில் வந்த ஆட்சி இந்த திமுக ஆட்சி. ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்டமாக அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உள்ளது இந்த திமுக அரசு. வீட்டு மக்களுக்காக உள்ள கட்சி திமுக, நாட்டு மக்களுக்காக உள்ள கட்சி அதிமுக. மக்களுக்கு ஜெயலலிதா என்று சொன்னால் ஞாபகம் வருபவர் ஜெயலலிதா மட்டுமே. ஸ்டாலின் மனதில் ஈவு இரக்கமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு பேசுவது தான் திராவிட மாடல்.
விஞ்ஞான மூளை படைத்த கட்சி திமுக. மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் சுமையை உயர்த்தி உள்ளது இந்த விடியா அரசு. 2011-ல் எங்கள் ஆட்சி போகும் என்றால் அது மின்வெட்டால் என்று முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாக்கு மூலம் கொடுத்தார். அது போலவே அவர்கள் ஆட்சி மாறியது. தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் போது அண்டை மாநிலத்தில் இருந்து மின்சாரம் வாங்கி வழங்கிய அரசு அதிமுக அரசு.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக மின்சார கட்டண உயர்வை அறிவிக்கிறார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் மக்களிடம், தொழில் நிறுவனங்களுடன் கருத்து கேட்ட பிறகு தான் அரசு அறிவிக்கும். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 525, 487-வது அறிவிப்பு கரோனா காலத்தில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்ற ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதை தேர்தல் முடிந்த பிறகு காற்றில் பறக்க விட்டு விட்டார்.
நகர்ப்புற மக்கள் சொத்து வீட்டு வரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற தேர்தலுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தி இருந்தால் அது தலைகீழாக மாறி இருக்கும். சொத்து வரி உயரவை திமுக அரசு திரும்ப பெற வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
செங்கல், மணல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகளுக்கு செல்வோர் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சிமெண்ட் கம்பெனி திமுகவை சேர்ந்தவர்களது, அதில் ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார்கள், ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினர், அதை இப்போது வரை நிறைவேற்றவில்லை. திருடன் கையில் சாவியை கொடுத்ததை போல் மக்கள் தவித்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000 தரப்படும் என்று சொல்லியது கோவிந்தா, கோவிந்தா தான்.
தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக மாறி விட்டது. அதை தடுக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுகவின் மூலதனமே பொய் தான். அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம். அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம்" என கூறி உரையை முடித்தார்.
இதையும் படிங்க: மின்சார மீட்டரின் வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!