சென்னை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் வரி செலுத்துவதற்கு மாநகராட்சி மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸில் வீடு மற்றும் வணிக வளாகங்களில் அளவுகள் அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனை சரி செய்வதற்காக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இன்று (நவ.25) தாம்பரம் மாநகராட்சியில் மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாம்பரம் மாநகராட்சிக்கு ஒரே நாளில் வந்ததால் மாநகராட்சி ஊழியர்கள் கோரிக்கை மனுக்களை வாங்க முடியாமலும் குறைகளை கேட்க முடியாமலும் திணறினர்.
வயதானோர் நீண்ட நேரமாக மழையில் மாநகராட்சி வளாகத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மண்டலம் வாரியாக முறையாக ஒவ்வொரு நாள் அழைக்கப்பட்டு எங்களுடைய கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை தீர்த்து இருக்கலாம், ஆனால் அனைவரையும் ஒரே நாளில் அழைத்ததால் சிரமம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினர்.
"ஏற்கனவே சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட நோட்டீஸில் தவறுகள் இருப்பதை சரி செய்வதற்காக முறையாக வரி கட்டும் நாங்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. முறையான ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மேற்கொண்டு இருக்கலாம்" என மனு கொடுக்க வந்த நபர் ஒருவர் கூறினார்.
இதையும் படிங்க: கால்நடைகளை தாக்கும் அம்மை நோய்: உயிர்களைக் காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை