பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு மேலும் 19 நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில், "மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை பிரதமர் எப்போது ஆற்றப் போகிறார்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு மக்கள் பிரதமரிடம் எதிர்பார்ப்பது, அறிவுரைகள் மட்டுமல்ல, மக்கள் உயிர் வாழ்வதற்கான நிவாரண உதவிகள், பொருள் உதவிகள், பண உதவிகள்தான். அத்தகைய எந்த அறிவிப்பும் பிரதமர் இதுவரை ஆற்றிய உரைகளில் இல்லை. அது வழக்கம்போல் இன்றைய உரையிலும் இல்லை. முடக்கப்பட்ட அல்லது முடங்கி இருக்கும் இந்தச் சமூக மக்களுக்கு பிரதமரோ அல்லது மத்திய அரசோ செய்யப் போகின்ற உதவிகள், தரப்போகும் சலுகைகள், காட்டப் போகும் கருணைகள் என்ன என்பதுதான் மக்கள் மனங்களில் உள்ள எதிர்பார்ப்பும், ஏக்கமும். வழக்கம் போல் அதில் ஏமாற்றமே ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “சீனாவில் நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என்றால், அம்மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் முடங்கியது மட்டுமல்ல காரணம். முடங்கி இருந்த மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசே செய்தது.
‘மத்திய அரசின் 2020-21 செலவு பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடி இருக்கிறது. இது நாட்டினுடைய, நாட்டு மக்களுடைய பணம், நம்முடைய பணம். இந்த 30 லட்சம் கோடியில் ரூ. 65 ஆயிரம் கோடியை மக்களின் பசியைப் போக்க பிரதமர் தரமாட்டாரா?’ என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேட்கும் கேள்வியில் உள்ள நியாயம், தர்மம், 21 நாள்கள் கடந்த பிறகும் பிரதமருக்குப் புரியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியைத் தரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து. மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளாக இல்லை. மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு, ஆறுதல் தரும் வகையிலான பதில் சொல்லும் உரையை எப்போது ஆற்றப் போகிறீர்கள்? என்பதுதான் நான் இன்று முன்வைக்க விரும்பும் கேள்வியாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...'வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்'-மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!