இந்தியாவில் கரோனா தாெற்றின் 3-ஆவது அலை ஏற்படும் எனவும், அந்த அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசு எச்சரித்து வருகிறது. மேலும், குழந்தைகளுக்கான மருத்துவக் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தாெற்றின் 3-ஆவது அலை வரும்போது குழந்தைகள் தாக்கப்பட்டால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குநர் எழிலரசி கூறியதாவது, “கரோனா தொற்றின் 3-ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், தேவையான அளவு படுக்கை வசதிகளும் ஏற்படுத்த இட வசதி உள்ளது. கரோனா தொற்றின் முதல் அலையில் குழந்தைகளுக்கான பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், 2-ஆவது அலையில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தெரிந்தன.
குழந்தைகளுக்கு அதிதீவிர சிகிச்சையளிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சிகிச்சை வழிகாட்டுதல் அடிப்படையில், சிகிக்சையளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள குழந்தைகள் மருத்துவர்களுக்கு, சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு மருத்துவர் சீனிவாசன் கூறும்போது, “கரோனா தொற்று 3-ஆவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்குவதற்கு தமிழ்நாட்டில் போதுமான மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றன. மேலும், பயிற்சி பெற்ற குழந்தைகள் நல மருத்துவர்களும் உள்ளனர்.
முதல் அலை,2-ஆவது அலையில் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு லேசான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை தான் இருந்தது. குழந்தைகளுக்கு ஏற்கனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கரோனா தொற்றின் 2 ஆவது அலையில் பாதிக்கப்படுவர்களில் அதிகளவில் வளர் இளம் பருவத்தினர் உள்ளனர். குழந்தைகளுக்கு குடும்பத்துடன் இருக்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது. முதல் அலையில் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் தனிமைப்படும்போது மற்றவர்களுக்கு தொற்று பரவுவது குறைகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டாலும் விரைந்து குணமடைந்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் 2 கோடிய 80 லட்சம் குழந்தைகளில் 1 லட்சம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். ஆனால், குழந்தைகளின் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ் பாதிப்புகள் குறைவாகவே ஏற்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படவில்லை’ - அமைச்சர் மா. சுப்பிரமணியன்