சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் ரெமா சந்திரமோகன், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யே பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், "குழந்தைகளுக்கு ஊட்டசத்து என்பதை கர்ப்ப காலத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இளம் பருவம் என கூறுப்படும் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு உணவில் விருப்பு வெறுப்பு வருகிறது. இந்த வயதில் அவ்வளவாக சாப்பிடுவதில்லை.
இதனால், உடல் பருமனாக இருப்பதையும் மிகவும் குறைவான எடையுடன் இருப்பதையும் பார்க்கிறோம். 50 சதவீதம் பெண்கள் ரத்தசோகை நோயுடன் இருக்கின்றனர். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், பிறக்கும் குழந்தைகளும் குறைவான எடையுடன் பிறக்கும்.
எனவே அவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளை அளிப்பது, சாப்பிட்டும் போது ஊட்டசத்து மிகுந்த உணவை அளிப்பதுடன், உடலை பாதிக்கும் ஜங்க் புட் போன்றவற்றை தவிர்ப்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கான கர்ப்ப காலம் 21 வயதிற்கு மேல் இருந்தால் அவர்களின் உடல் நலன் சரியாக இருக்கும். எனவே 21 வயதிற்கு மேல் திருமணம் செய்து குழந்தைப் பிறப்பது நல்லது.
குழந்தை பிறக்கும் மாதமும் முக்கியமானதாகும். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை எடைக் குறைவாக இருக்கும். தாய்பால் கொடுப்பது முக்கியமானது. குழந்தை பிறந்த உடனே 6 மாதம் தாய்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 6 மாதம் கழித்து இணை உணவு அளிக்க வேண்டும்.
அப்போது, குழந்தைகளுக்கு டின் உணவை அணுகாமல், வீட்டில் சமைக்கும் உணவை கொடுக்க வேண்டும். முதலில் குழந்தைக்கு உணவை கொழைய வைத்து கொடுக்க வேண்டும். 10 மாதம் கடந்த பின்னர் முட்டை சேர்த்துக் கொடுக்கலாம். கலோரி அதிரிக்க எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வயதிற்கு மேல் வீட்டில் சமைப்பதையே குழந்தைக்கு கொடுக்கலாம். சாப்பாட்டை காலை, மதியம், இரவு என 3 வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஊட்டசத்து அதிகரிக்கும் வகையில் உணவு அளிக்க வேண்டும். குழந்தை முதல் வயதில் தான் வேகமாக வளரும். அவ்வாறு கொடுக்கும் ஊட்டசத்துகள் குழந்தைகளிடம் உள்ள குறைபாட்டை சரிசெய்து விடும்.
குழந்தைகள், 2 வயது முதல் 7 வயது வரையில் அந்தளவிற்கு வேகமாக வளர மாட்டார்கள். அதனால் அவர்களுக்கான பசியும் குறையும். எனவே பிஸ்கட் உள்ளிட்ட பேக்கரியில் இருந்து வாங்கித் தரும் பொருட்களை தவிர்க்க வேண்டும். இதில் கார்போ ஹைட்ரேட் மட்டும் தான் உள்ளது. எனவே இதனால் மலச்சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.
இத்தகைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு, வீட்டு உணவுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிட கொடுக்க வேண்டும். அதன் பின்னர் குழந்தைகள் இரவு சீக்கிரம் தூங்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் காலையில் சீக்கிரம் எழுந்துக் கொள்ளும்.
காலையில் எழுந்ததும் பால் அல்லது வெந்நீர் கொடுத்தால் குழந்தை இயற்கை உபாதையை கழிக்க எளிதாக இருக்கும். குழந்தை தூங்கி எழுந்து நடமாடினால் இயற்கை உபாதையை கழிக்கும். இதற்கு நார்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பருப்புகள், சிறுதானிய உணவுகள் போன்றவற்றை கொடுக்கலாம்.
பள்ளிக்கு செல்லும் வயது வந்த குழந்தைகள் 3 வேலை குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட்டால் போதும். மதியம் உணவிற்கு இடையே பிஸ்கட் சாப்பிட்டால் பசி எடுக்காமல் மதிய உணவை சரியாக உண்ணமாட்டார்கள். எனவே மதியம் கொடுத்து அனுப்பும் உணவை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் தயாரித்து கொடுக்கலாம்.
நிறையப் பள்ளிகளில் சைவ உணவுதான் கொண்டு வர வேண்டும் என கூறுகின்றனர். அதனையே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்துக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பழம் அல்லது காய்கறிகளை கொடுத்து அனுப்பலாம்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் சாப்பிடும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளை நன்றாக கழுவி விட்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டப்பினனர் மீதமுள்ள உணவை எடுத்துப் போடும் போது மூடப்பட்டப் பாத்திரத்தில் வைத்து போட வேண்டும். சமைத்த உடனே சூடாக சாப்பிடுவது நல்லது" என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கல்லீரல் பாதுகாப்பில் கில்லியான சென்னை அரசு மருத்துவமனை; சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம்!