சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டாவது தலைநகர் தொடர்பான விவாதம் சூடுபடித்துள்ளது. மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அண்மையில் முன் வைத்தார் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார். இதற்காக மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ இதே கோரிக்கையை வலியுறுத்தினார். பின்னர் வெல்லமண்டி நடராஜன் திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து திருநெல்வேலி, கோவை என்று தலைநகருக்கான போட்டியில் பல்வேறு நகரங்களின் பெயர்களும் முன்னிறுத்தப்பட்டன. இரண்டாம் தலைநகர் என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து என்று அது தொடர்பான கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இருந்தாலும் மழை நின்றும் நிற்காத தூவானத்தைப் போல அமைச்சர் பதவியைவிட மதுரையின் வளர்ச்சியே முக்கியம் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.
எம்ஜிஆரின் அறிவிப்பு
தற்போது மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க கோருவதை எதிர்ப்பவர்கள் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரே திருச்சியைதான் தேர்வு செய்தார் என்கின்றனர். ஆனால், திருச்சிக்கு முன்னரே அவர் மதுரையை தேர்வு செய்ததாக கூறுகிறார் மதுரையின் முன்னாள் மேயரும், தமிழ்நாட்டின் டெல்லி முன்னாள் சிறப்பு பிரதிநிதியாகவும் செயல்பட்ட பட்டுராஜன். தற்போது 80 வயது நிறம்பிய அவர் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தை நினைவுகூருகிறார்.
மேலும், "தண்ணீர் பற்றாக்குறை, போக்குவரத்து நேரிசல் போன்றவற்றால் இரண்டாவது தலைநகர் அமைக்க வேண்டும் என எம்ஜிஆர் எண்ணினார். குறிப்பாக மக்கள் தொகை நெருக்கடி அதிகமாக இருந்தால் நோயினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவையாற்ற முடியாது என்பதை அப்போதே எம்ஜிஆர் கணித்திருந்தார். கரோனா பாதிப்பு வரும்போது அதைத்தான் நான் சிந்தித்து பார்த்தேன். மற்ற மாவட்டங்களுடன், மற்ற தலைநகரங்களுடனும் ஒப்பிடுகையில் சென்னையில் மிக அதிக அளவில் கரோனா பாதிப்பு உள்ளது.
தென் மாவட்டத்தில் எம்ஜிஆர் முதல் முதலாக நின்று போட்டியிட்டது அருப்புக்கோட்டை தொகுதி. இதனால் அருப்புக்கோட்டையில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. தற்போதுள்ள மதுரை மாநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையே இரண்டாவது தலைநகரை அவர் அமைக்க விரும்பினார். அங்கு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும் திட்டமிட்டார்.
தொழில் வளர்ச்சி பெற்றால் அந்தந்த பகுதிகளிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும், வேலைக்காக மக்கள் இடம்பெயர்வது குறையும் என்ற சூழல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த முயற்சியால் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஒரு சில நிறுவனங்கள் தொழில் முதலீட்டை செய்ய முன்வந்துள்ளன. இருப்பினும் தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்பு அளிக்கும் பெரிய அளவில் தொழில் பூங்காக்களோ, உற்பத்தி தொழிற்சாலைகளோ இல்லாததே பிரச்னைக்கு காரணமாக அமைகிறது.
தென் மாவட்டங்கள் அனைத்துக்கும் மையப்புள்ளி மதுரை. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் என தென் மாவட்டங்கள் அனைத்துக்கும் அருகில் உள்ளது. திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, சென்னை போன்ற நகரங்களில் இருந்தும் எளிதில் வந்து செல்லலாம். சர்வதேச விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவை மதுரையை இரண்டாவது தலைநகராக்க வலுசேர்க்கும் காரணங்கள்.
உள்கட்டமைப்பு
நகரங்களிடையே சமனற்ற வளர்ச்சி என்ற பிரச்னைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஹைதராபாத். முக்கிய தொழில்நுட்ப மையங்களும், தொழில் நிறுவனங்களும் ஹைதராபாத்தை சுற்றியே அமைந்துள்ளன. அதைத்தாண்டி விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற சில நகரங்களில் இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு செல்லும் அளவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதியில்லை. அதே நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளதாக தொழில்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் இருந்தாலும், அங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே விமான சேவை உள்ளது. விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருக்கும்போது பன்னாட்டு நிறுவனங்கள் வந்து முதலீடு செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் அரசு இரண்டாவது தலைநகரை அமைப்பதைவிட, அனைத்து நகரங்களிலும் சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தொழில் நிறுவனங்களை ஈர்க்க வியூகம் வகுக்க வேண்டும். பொது சுகாதாரத்தை மேம்படுத்தி மக்களுக்கு உயர்தர மருத்து சேவையைும் கல்வியை வழங்க வேண்டும். பரந்துபட்ட வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: 2ஆவது தலைநகர் மதுரை: எம்ஜிஆரின் கனவை நனவாக்க விரும்பும் செல்லூர் ராஜூ