சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் உள்ள 3ஆயிரத்து 436 பேருந்துகளில் சுமார் 3ஆயிரத்து 233 பேருந்துகளை இயக்குகின்றன. இந்த மாநகரப் பேருந்துகளில் ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். எனினும் 70 விழுக்காடு பேருந்துகள் பழையதாகவும் அதிக வருடங்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான பேருந்துகள் அடிக்கடி பழுதாகி, தொழில்நுட்பக் கோளாறுகளை உருவாக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பேருந்துகளை சுத்தம் செய்யாமல் இருப்பதால் மேலும் இது பயணிகளிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
மாநகரப் பேருந்துகளின் தற்போதைய நிலை:
மொத்தம் இயக்கக்கூடிய சுமார் 3ஆயிரத்து 400 பேருந்துகளில் டீலக்ஸ் என்று சொல்லக்கடிய சொகுசு பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்து 100ஆக உள்ளன. White Board என்று சொல்லக்கூடிய சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை சுமார் 2ஆயிரத்து 200ஆக உள்ளன. மேலும், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் எண்ணிக்கை 46ஆக உள்ளன. மீதமுள்ள பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகம் LSS என்று சொல்லக்கூடிய Green Board பேருந்துகளை இயக்குகின்றன. ஒரு பேருந்தின் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் என்ற நிலையில், தற்போது ஓடும் சாதாரண பேருந்துகள் 20 வருடத்திற்கு மேல் இயக்கப்படுகிறது என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யக்கூடிய சாதாரண பேருந்துகள் தரமற்றவையா?
சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தற்போதைய அரசு அறிவித்த நிலையில், இந்த வகையான பேருந்துகள் அனைத்தும் தரமற்ற பேருந்துகளாக, அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்கு மேல் இயக்கிய பேருந்துகளை இந்த திட்டத்திற்கு உபயோகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் குறைந்த கட்டணம் மற்றும் கட்டணமில்லா பேருந்துகளில் அதிகமாக பயணிகள் பயணம் செய்வதால் தரமற்ற பேருந்துகள் அடிக்கடி பழுதாகி உள்ளது என பயணிகள் கூறுகின்றனர்.
மேலும், இதனால் சில நேரங்களில் பயணிகள் பயணத்தின் நடுவிலோ இறக்கிவிடப்படுகிற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் கட்டணத் திருத்தத்திற்குப் பிறகும், மாநகர பேருந்து மேலாண்மையில் நிதிச் சிக்கலில் உள்ளது என ஒப்புக்கொண்ட அதிகாரிகள் நீண்ட தூரம் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் அடிக்கடி பிரேக் பழுதடைவது உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என தெரிவித்தனர். மேலும் மாநகரில் உள்ள 34 பேருந்து பணிமணைகளில், ஒவ்வொரு பணிமனையில் இருந்தும் குறைந்தது 10 முதல் 15 பேருந்துகள் அடிக்கடி இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.
யூனியன் அமைப்புகள் மற்றும் ஊழியர்கள் கூறுவது என்ன?
இது குறித்து நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் மாநில பொதுச் செயலாளர் தளபதி நம்மிடம் கூறுகையில், “பெரும்பாலான பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளது. உடைந்த கண்ணாடிகள், தளர்வான இருக்கைகள், கிழிந்த சீட் கவர்கள், துருப்பிடித்த உட்புறங்கள் மற்றும் வெளிப்புறங்கள், மோசமான பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் குப்பைகள் நிறைந்த நடுப்பகுதி உள்ளிட்டவைகளால் பேருந்துகளின் ஓட்டுனர்கள் மட்டுமல்லாமல், பயணிகளும் அவதிப்படுகின்றனர்" என்றார்.
மேலும், “போக்குவரத்து துறை புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று கூறி வந்த போதிலும், இந்த வாக்குறுதியை தாமதம் காட்டி வருகிறது என்ற அவர் பழுதான பேருந்துகளை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறும் போது அவர்கள் ஊழியர்களை மிரட்டி பேருந்துகளை இயக்க வைக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.
பேருந்துகள் சுத்தம் செய்யப்படுகிறதா?
இது குறித்து ஆவடி பணிமனையில் வேலை செய்யும் ஓட்டுநர் ஒருவர் கூறுகையில் , “மாநகர பேருந்துகளில் 2 முதல் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். எனவே பேருந்துகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்வதில்லை. அனைத்து 34 பனிமனைகளிலும் பேருந்துகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் (water wash) செய்வதற்கு மாநகர பேருந்து கழகம் உபகரணங்களை வாங்கியிருந்தாலும், சுமார் 20 ஆலைகள் செயல்படாமல் உள்ளன.
எனினும் தற்போது எந்த பேருந்துகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மழைக்காலங்களில் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அடித்தளத்தில் சேற்று நீர் தெறிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இந்த சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்” என்றார்.
மேலும், ஒரு பணிமனையின் மெக்கானிக் நம்மிடம் கூறுகையில், “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநகர பேருந்துகள் தண்ணீர் நிலையங்களில் சுத்தம் செய்யப்பட்டன என்பது உண்மைதான். ஆனால் இன்று மாசு படிந்து இருக்கைகளில் பயணிகள் உட்கார தயங்குகின்றனர். இதனை மாநகர போக்குவரத்து அதிகாரிகள் அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
பயணிகளின் குற்றச்சாட்டு:
இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், "நான் போரூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை சாதாரண பேருந்தில் (எண்: 26) பயணிக்கிறேன். சில நேரம் பேருந்து தானாகவே நின்று கொள்கிறது. இது குறித்து ஓட்டுநரிடம் கேள்வி கேட்டால் சிறிது நேரம் காத்திருக்க சொல்கிறார். பெரும்பாலும் இது போன்ற பிரச்னைகள் சாதாரண பேருந்துகளில் மட்டும் நடக்கிறது” என தெரிவித்தார்.
அதிகாரிகள் கூறுவது என்ன?
இது குறித்து மாநகர பேருந்து கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டபோது, “இந்த பிரச்சினை குறித்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் புதிய பேருந்துகள் வாங்குவது குறித்து போக்குவரத்துத் துறை முடிவெடுக்கும். மேலும் பழுதான பேருந்துகளை இயக்கக் கூடாது என கிளை மேலார்களுக்கு உத்தரவு பிறப்பைக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை சுத்தம் செய்வது தொடர்பாக அனைத்து நீர் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து உன்மை தன்மையை அறிய ஈடிவி பாரத் செய்தியாளர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: "என் தாய், தந்தை, குழந்தைகளுக்கும் மேலாக காட்பாடி தொகுதியை நேசிக்கிறேன்" - அமைச்சர் துரைமுருகன்!