சென்னை: மாதவரத்தைச் சேர்ந்தவர் சுகிர்தராஜ் (64). இவருடைய மகன் அமெரிக்காவில் பணிசெய்து வரும் நிலையில், சுகிர்த ராஜ் அமெரிக்காவில் உள்ள மகனைப் பார்ப்பதற்காக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் மகனுடன் 3 மாதங்கள் தங்கியிருந்த பெற்றோர், அவர்களுடைய விசா காலங்கள் முடிவடைய உள்ளதால், அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டு இருந்தனர். துபாயிலிருந்து சென்னை வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சுகிர்த ராஜ் மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, சுகிர்தராஜ்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்ததையடுத்து மனைவி விமான பணிப்பெண்களின் உதவியை நாடியுள்ளார். விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளில் மருத்துவர் ஒருவர், சுகிர்த ராஜின் மனைவியில் அலறலைக்கேட்டு விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் சுகிர்த ராஜிற்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
அதோடு தலைமை விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தொடர்பு கொண்டு பயணி ஒருவருக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால், விமானம் விரைந்து இறங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து இன்று (அக்.2) காலை 8:25 மணிக்கு, சென்னையில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் 20 நிமிடங்கள் முன்னதாகவே காலை 8.05 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறிப் பயணி சுகிர்த ராஜைப் பரிசோதித்தனர். ஆனால் பயணி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்தது. சுகிர்த ராஜ் கடுமையான மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து விமானத்துக்குள் மனைவி கதறி அழுதார்.
இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கிய பின்பு, விமான ஊழியர்கள் விமானத்திற்குள் ஏறி சுகிர்த ராஜ் உடலைக் கீழே இறக்கினர். அதோடு சென்னை விமான நிலைய காவல் துறையினர், விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாகக் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தகனம்.. உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!