சென்னை: சுற்றுலா பயணிகள் விசாவில் கத்தார் நாட்டிற்கு சென்றவர் அங்கு சட்டவிரோதமாக சில ஆண்டுகள் தங்கி இருந்து விட்டு போலி பாஸ்போர்ட்டில் இந்தியா திரும்பிய நிலையில் அவரை குடியுரிமை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (41). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகள் விசாவில் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்பு கருப்பையா சொந்த ஊர் திரும்பாமல் கத்தார் நாட்டிலேயே சட்ட விரோதமாக தங்கி இருந்து கொண்டு கூலி வேலை செய்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கருப்பையாவுக்கு சொந்த ஊர் இந்தியா திரும்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா விசாவில் சென்றவர் சட்ட விரோதமாக கத்தார் நாட்டில் தங்கி விட்டதால் இவருடைய பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது. எனவே அதே பாஸ்போர்ட்டில் இவர் சொந்த ஊர் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் கருப்பையா போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுக்கும் ஏஜெண்டுகளை அணுகி அவர்களுக்கு பணம் கொடுத்து ஜோசப் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். அந்தப் போலி பாஸ்போர்ட்டுக்கு தகுந்தாற் போல் ஜோசப் என்ற பெயரில் போலி அடையாள அட்டை போன்றவைகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து புறப்பட்டு நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதித்து அனுப்பினர். அதுபோல் கருப்பையா பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்தனர். அதில் ஜோசப் என்ற பெயர் இருந்ததால் அதிகாரிகளுக்கு அவர் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை அடுத்து அதிகாரிகள் அவரை வெளியே விடாமல் நிறுத்தி வைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கருப்பையா என்பவர் ஜோசப் என்ற பெயருடைய போலி பாஸ்போர்ட்டில் வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் கருப்பையாவை கைது செய்தனர். அதோடு சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து கருப்பையாவை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்த ஏஜெண்டுகள் யார்? போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்க எவ்வளவு பணம் பெற்றனர்? என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.