உலக நாடுகளின் கண்முன் நிற்கும் சவாலாக, கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று உள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பறவாமல் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சீனா, அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே, இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்த எம்.வி.மேக்னேட் கப்பல் நேற்று உள்ளே வர அனுமதிக்கப்பட்டது. இந்த கப்பல் 14 நாட்கள் சீனாவுக்குச் சென்று திரும்பியதால், கப்பலில் உள்ளவர்களுக்கு தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்னரே, துறைமுகத்துக்குள் கப்பல் நுழைய அனுமதி அளிக்கப்பட்டது.
இருப்பினும், கப்பல் கரை சேர்ந்த பிறகு, துறைமுக சுகாதார அலுவலர், துணை சுகாதார அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு, கப்பலில் உள்ளவர்களை தீவிர பரிசோதனை செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கப்பலில் உள்ள 19 சீனர்களில் இருவருக்கு காய்ச்சல் இருந்தது.
அவர்களுக்கு கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறியான சுவாசப் பிரச்னை ஏதும் இல்லை. இருப்பினும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், தற்போது இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர்கள் இருவருக்கும் கொரானோ வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து தமிழகம் வந்த கப்பலில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க : தூத்துக்குடியில் சீனக் கப்பல் வருகையால் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை!