அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை டாப் இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார். கோலிவுட்டில் எம்ஜிஆர் உள்பட பலரும் இந்நாவலை திரைப்படமாக்க முயற்சித்தனர். ஆனால் இந்தக் கனவு தற்போது மணிரத்னம் மூலம் மெய்ப்பட உள்ளது.
10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னன் அருள்மொழிவர்மன் கதையை விவரிக்கும் விதமாக அமைந்திருக்கும் பொன்னியன் செல்வன் நாவலை, படமாக இயக்குவது இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த நிலையில், தற்போது அதன் ஷுட்டிங் 75 விழுக்காடு முடிவடைந்துள்ளது.
மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை லைகா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. தாய்லாந்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, புதுச்சேரி, ஹைதராபாத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம், ஜெய்ராம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மத்திய பிரதேசத்தில் முகாமிட்டுள்ளனர். அரண்மனை நகரம் என்று அழைக்கப்படும் மிகவும் பழமையான நகரமான ஓர்ச்சா எனும் இடத்தில், தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி, சில நாள்களுக்கு முன்பு இரண்டு பாகங்களுக்குமான தனது பகுதியை முடித்துவிட்டதாக, அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது, இப்படத்தில் சுந்தர சோழரின் மூத்த மகனும், அருள்மொழி வர்மன் எனப்படும் ராஜராஜ சோழனின் அண்ணனுமான ஆதித்த கரிகாலனாக நடிக்கும் விக்ரமின் பகுதிகள் முடிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பவருடன் மூன்றாவது திருமணம் - வனிதாவின் புதிய அவதாரம்