சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனாவை தடுப்பதற்கான அனைத்து வசதிகளும் தமிழ்நாட்டில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கரோனா தாக்கம் அதிகப்படியாக உள்ளது. தற்போது இந்தியாவில் 19 மாநிலங்களில் கரோனா நோய் தொற்று ஏறுமுகமாக உள்ளது.
இந்த மாநிலங்களில் தமிழ்நாடும் அடங்கும். நோயை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களிடம் கரோனா தொய்வு அதிகமாக உள்ளது. இறப்பு விகிதம் 10க்கும் குறைவாக இருக்கிறது எனக் கருதி பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். பிப்ரவரி மாதத்திற்கு பின்னர், திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றால் கரோனா அதிகரித்தது.
இந்த மாதம் குறிப்பாக அரசியல் நிகழ்ச்சிகளால் கரோனா தாெற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாமல் இருந்தால் நோய் பரவும். எனவே கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
பள்ளிகள், வங்கிகள், குடியிருப்புகள், ஹோட்டல், கலாசார கூட்டங்கள், பொதுபோக்குவரத்து உள்ளிட்டவைகளில் நிலையான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவதை பொதுமக்கள் கட்டாயப்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 16 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். வாய்ப்புள்ள பொதுமக்கள் இலவசமாக அளிக்கப்படும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் கவனிப்பு மையத்தை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளோம். சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணா நகர், அடையார், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது.
நிலையான வழிமுறைகளை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியை பின்பற்றி அனைத்து விதமான கூட்டங்களையும் நடத்திக்கொள்ள அனுமதி உண்டு. ஊரடங்கு என்னும் வதந்திகளை நம்ப வேண்டாம். இருப்பினும் தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் ஏறுமுகமாக உள்ளது. இதனை உணர்ந்து மக்கள் அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.
அரசியல் கட்சியின் கூட்டத்தில் தொண்டர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அரசியில் கட்சியின் கூட்டத்திற்கு முகக்கவசம் கட்டாயம் என கூறித்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:'எம்ஜிஆர் தொடங்கிய மூன்றாவது அணிதான் மற்றக் கட்சிகளை வனவாசம் அனுப்பியது' - கமல்ஹாசன்!