சென்னை: இந்திய தொழிற்கூட்டமைப்பு சார்பில் நேற்று(மார்ச். 4) நடந்த கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”ஐநாவின் மில்லினியம் டெவலப்மென்ட் கோல்ஸ் என்கிற குறிக்கோளின்படி தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரத்தை எட்டுவது எனும் பொளுளாதார குறிக்கோளை வென்றெடுக்கும். அதே நேரத்தில் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களையும் சேர்ந்தே அடையும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. வளமான சுகாதார கட்டமைப்பு என்பது ஒரு மாநிலத்தின் சிறப்பான வளர்ச்சி குறிக்கோளுக்கு காரணமாக உள்ளது.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் சுகாதார கட்டமைப்பு முக்கிய காரணமாக உள்ளது. இந்தநேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு பார்வையில், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் குறிக்கோளில் தமிழ்நாடு சுகாதாரத்துறையும் பங்கெடுக்கின்றது. மருத்துவத்துறை முக்கிய முன்னெடுப்பான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் மூலம், கடந்த சில மாதங்களின் நமது அரசு பொதுமக்களின் இல்லம் தேடி மருத்துவசேவைகளை வழங்கும் திட்டம் உலகிலேயே முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தால் இதுவரை 50 லட்சம் மக்களுக்கும் மேல் பயனடைந்துள்ளனர். அதேபோல் கடந்த டிசம்பர் 2021ஆம் ஆண்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்காக “இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48 தொடங்கப்பட்டது. அதன்படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு முதல் 48 மணிநேர அவசர உடனடி சிகிச்சைக்கான செலவினங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு அலோபதி மருத்துவம் தவிர, பிற மருத்துவ முறைகளையும் ஊக்குவித்து கோவிட் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது.
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீடு திட்டத்தால், தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கோவிட் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கையாள, ஒன்றிய அரசுடன் இணைந்து மாநிலம் முழுவதும் ஆக்ஸிஜன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பானது மக்களுக்கான அத்தியாவசய பொருட்கள், சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக செயல்பட்டன. கரோனா காலங்களில் பணியாளர்களை தடுப்பூசி போட ஊக்குவித்தமை, ஆக்ஸிஜன் உற்பத்தியில் உதவியது என பலவகைகளில் முக்கிய பங்காற்றியது” என்றார்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தின் முதல் பெண் மேயரானார் மகாலட்சுமி யுவராஜ்