சென்னை: பணி நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி ஒவ்வொரு முறையும் பகுதி நேர ஆசிரியர்களிடம் பல்வேறு சங்கத்தினர் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், திருச்சியில் மாநாடு நடத்துவதாகக்கூறி, மீண்டும் வசூல் வேட்டையில் பலர் இறங்கி இருக்கின்றனர். இந்த விடயம் பகுதி நேர ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் தங்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது சரியா? என கேள்வி எழுப்பும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களில், தற்போது 12ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் இவர்களை பணி நிரந்தரம் செய்வதாகத்தெரிவிக்கப்பட்டது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களையும், கோரிக்கைகளையும் முன் வைத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வரையிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், திமுக ஆட்சியில் சென்னையில் நடத்தப்பட்ட ‘ஜாக்டோ ஜியோ’ மாநாட்டிலும் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கு மாறாக, அவர்களின் ஓய்வுபெறும் வயது என்பது மற்ற பணியாளர்கள்போல் 60ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் அவர்கள் ஏமாற்றத்தில் இருக்கும் நிலையில் , மீண்டும் திருச்சியில் மாநாடு நடத்தப்போவதாகக்கூறி, பகுதி நேர ஆசிரியர்களிடம் 700 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சிலர் வசூலித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. குறைந்த சம்பளம் வாங்கும் தங்களிடம், ஒவ்வொரு முறையும் ஏமாற்றி இப்படி பணம் வசூலிப்பது சரியா என பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பான ஆடியோக்கள் பல, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - இமெயில் முகவரி வெளியீடு