சென்னை: பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாட்டில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆனாலும் இவர்களை இதுவரை அரசு பணி நிரந்தரம் செய்யவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சி அமைந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கமாக மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறையின் பொழுது பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்படும்.
மேலும் அவர்களுக்கு பதினோரு மாதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மாணவர்களுக்கு தொடர்ந்து மே மாதமும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் மே 1-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதால் 2022 மே மாதம் பகுதிநேர பயிற்றுநர்கள் பள்ளிக்கு வருகை புரியத் தேவையில்லை என பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்தில் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெசுராஜா கூறும்போது, "கடந்த பத்தாண்டுகளாக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறோம். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தினோம். அப்போது அழைத்துப் பேசிய அதிகாரிகள் தங்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறினர். ஆனால் மே மாதம் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளனர். எனவே முதலமைச்சர் தலையிட்டு தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர் பிரியா கூறும்பொழுது, "பகுதி நேர ஆசிரியர்களை மே மாதம் பள்ளிக்கு வர வேண்டாம் என கூறியுள்ளனர். மாணவர்கள் எங்களைப் பார்த்து நாங்கள் எல்லாம் பள்ளிக்குச் செல்கிறோம். டீச்சர் நீங்கள் பள்ளிக்கு வரவில்லையா என கேட்கின்றனர். இது மிகவும் மன உளைச்சலாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்" என தெரிவித்தார்.