சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு அதற்கான முதற்கட்ட பணிகளையும் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பரந்தூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கடந்த ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர். நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்ற நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் ஆகியோருடன் ஏகனாபுரம் பகுதி மக்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏகனாபுரம் பகுதியைச்சேர்ந்தவரும், போராட்டக்குழுவின் பிரதிநிதியுமான சுப்பிரமணியன் கூறுகையில், ’எங்கள் பகுதியில் விமான நிலையம் அமைத்தால் ஏராளமான நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்பதை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே எடுத்துரைத்தோம். அதே கருத்தை இன்று அமைச்சர்களிடம் கூறினோம்.
விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர்கள் கூறியதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிடும் வரை தங்களின் மாலை நேரப் போராட்டம் தொடரும் எனவும் அவர் அறிவித்தார்.
இதையும் படிங்க:கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி