'கற்பகத் தரு' எனும் சிறப்புப் பெயருடன், வீட்டின் கூரை, பனை ஓலை எனத் தொடங்கி, பதநீர், நுங்கு, பாமாயில் வரை, பண்டைய காலம் தொடங்கி இன்று வரை பல்வேறு பலன்களை வழங்கியும், பல உயிரினங்களின் வசிப்பிடமாகவும், தமிழ்நாட்டில் அடையாளமாகவும் பனை மரங்கள் திகழ்ந்து வருகின்றன.
ஆனால், இத்தகைய பனை மரங்கள், சாலை விரிவாக்கத் திட்டத்தின் பெயரில், ஆயிரக்கணக்கில் அகற்றப்படும் அவலம் தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகிறது.
அழிக்கப்படும் 'மாநில மரம்'
தமிழ்நாட்டில், விழுப்புரம்-புதுச்சேரி சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கான பனை மரங்கள் தினந்தோறும் வெட்டப்படுகின்றன.
வெட்டப்பட்ட மரங்களை அந்த இடத்திலேயே அறுவை இயந்திரம் மூலம் சரி செய்து, லாரிகளில் ஏற்றிச் செல்கின்றனர். பனை மரங்கள் மட்டுமல்லாமல், மற்ற மரங்களும்கூட சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டப்படுவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர், இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கண்ணுக்கெட்டிய பகுதிகளில் எல்லாம் பனை மரங்கள் தென்படும். ஆனால் தற்போது விவசாயிகள் பனை மரங்களை சொற்ப விலைக்கு விற்றுவிடுகின்றனர்.
இதனால் சுற்றுசூழலுக்கும் பாதிப்பும் உண்டாகிறது என அச்சம் தெரிவிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பனை மரங்களை வெட்டுவோர் மீதும் எந்தத் துறை வெட்டுவதற்கு அனுமதி கொடுக்கிறதோ அந்தத் துறை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரிந்த எண்ணிக்கை - இயற்கை ஆர்வலர் வேதனை
இது குறித்து இயற்கை ஆர்வலர் கொ.அசோக சக்கரவர்த்தி கூறுகையில், "இன்றைக்குத் தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பனை மரங்களின் எண்ணிக்கை 30 கோடிக்கும் மேல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்றைக்கு அவற்றின் எண்ணிக்கை வெறும் ஐந்து கோடிகள் தான் என ஒரு தரவு கூறுகிறது.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் - ரூ. 3 கோடி மதிப்பில் பனை மேம்பாட்டு இயக்கம்
பல்லுயிரிகளின் வசிப்பிடம்
பனை மரங்கள் சுற்றுச்சூழலியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான பறவைகள் எல்லா மரங்களிலும் தங்களது கூடுகளைக் காட்டினாலும், தூக்கணாங்குருவிகளும் கிளிகளும் இந்தப் பனை மரங்களில்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. பாம்பு வகைகளும் இம்மரங்களில் அதிகம் வசிக்கின்றன' என்றார்.
ஏற்கெனவே, துறையூர்-பெரம்பலூர் சாலை விரிவாக்கப்பணியின்போது நூற்றுக்கணக்கான, பழமையான புளிய மரங்கள் வெட்டப்பட்டதை நினைவுகூர்ந்த சக்கரவர்த்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மரங்களை வெட்டினால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இது தொடர்கிறது என வருத்தம் தெரிவித்தார்.
வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக நடப்படும் மரக்கன்றுகள்
பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "மரங்களை வெட்ட சரியான உத்தரவு வாங்கப்பட்டுள்ளது.
மேலும், நெடுஞ்சாலைத்துறை, எத்தனை மரங்களை அகற்றி உள்ளதோ, அதற்குப் பதிலாக மரக்கன்றுகள் நட்டு வருகிறது. மரங்கள் இல்லாத இடங்களில்கூட நெடுஞ்சாலைத்துறை மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாத்து வருகிறது'' எனத் தெரிவித்தார்.
பனை மேம்பாட்டு இயக்கம்
தமிழ்நாட்டில் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட கடந்த வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை பாதுகாக்கவும், பனை மரங்கள் வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் மூன்று கோடி ரூபாய் செலவில் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் மதிப்புக்கூட்டுப்பொருளான பனை வெல்லத்தினை பனை வாரியம், வேளாண் கூட்டுறவு சங்கங்களுடன் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வேளாண் பட்ஜெட்டில் பனைமரம்
தமிழர்களின் வாழ்வோடும் மொழியோடும் வளத்தோடும் ஒன்றுபட்டு, மழை ஈர்ப்பு மையம், நீர் நிலைகளின் காவலன் என்றும் அழைக்கப்படும் பனை மரத்தினை, வேரோடு வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்குப் பயன்படுத்தும் செயலினைத் தடுக்கவும் இவ்வரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும்; சுனாமியின் போது சாயாத ஒரே மரம் பனை மரம் தான் எனவும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவற்றைப் பாதுகாக்க அரசு வலியுறுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் ஒருங்கிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!