சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் நீத்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பாக பாரதிய ஜனதா தொண்டர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பல அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன், நள்ளிரவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இல்லத்துக்குச் சென்று நேரடியாக அவரிடம் மன்னிப்புக்கேட்டார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச்சந்தித்த டாக்டர் சரவணன், இனிமேல் தான் பாஜகவில் தொடரப்போவது இல்லையென்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து டாக்டர் சரவணனை நீக்குவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது இந்தச்சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், தன் மீது வீசப்பட்ட செருப்பின் புகைப்படத்துடன் கூடிய பதிவை ட்வீட் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “நேற்றைய சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும். அதைப் பின்பு சொல்கிறேன். விமான நிலையத்தில் 100 மீட்டர் வரை அனுமதிக்கப்பட்ட சிண்ட்ரெல்லாவும் அவரது 10 நிர்வாகிகளுக்கும் ஒரு தகவல். உங்களது காலணி வேண்டும் என்றால் பெற்றுக்கொள்ளலாம். எனது ஊழியர் அதைப் பத்திரமாக வைத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.