சென்னை: உங்களது ஆட்சியில் எவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறோம் என்று கூறிவிட்டு பெட்ரோல் விலையை மட்டும் குறைத்து இருக்கிறீர்கள் என்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையின் போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி உட்பட பல்வேறு உறுப்பினர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்திருக்கின்றனர். நான் இடையில் ஒரு இருபது ஆண்டு தமிழ்நாட்டில் இல்லாத காரணத்தினால் விளக்கமாக சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன், நத்தம் விஸ்வநாதன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை பேருந்துகளில் இலவசப் பயணத்தை அப்போது இருந்த அரசு அளித்தது. எவ்வளவு ரூபாய் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய உறுப்பினர் நத்தம் விசுவநாதன், நாங்கள் அதுபோன்ற வாக்குறுதிகள் எதையும் தரவில்லை. நீங்கள் தந்துவிட்டு செய்யாததால்தான் குறிப்பிடுகிறோம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஏவ வேலு, 58 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு இலவச பயணம் என்று கூறினீர்களே செய்தீர்களா? எத்தனை நபர்களுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டது, சொல்லவில்லை என்று சொல்லாதீர்கள், சொன்னதை செய்ய முடியவில்லை என்று சொல்லுங்கள் என்றார்.
இதையும் படிங்க: விடுதலை வேட்கை கொண்ட கவிஞன்: புலவர் புலமைப்பித்தன் நினைவலைகள்