சென்னை: நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையும் பெருமளவில் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவினால் 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.
இந்த அழைப்பு மையம் நாளொன்றுக்கு 6 முதல் 7 ஆக்சிஜன் பற்றாக்குறை சம்பந்தமான அழைப்புகளைப் பெற்றுவருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாள்களில் அழைப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் 33 அரசு மருத்துவமனை கல்லூரிகள் உள்ளன. இவைகள் அனைத்திலும் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மற்ற தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சை நோயாளிகளுக்கு கொடுக்கிறது. இது போக, தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை 462 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவலின்படி 104 அழைப்பு மையம் ஆக்சிஜன் பற்றாக்குறை சம்பந்தமாக 6 லிருந்து 7 அழைப்புகளைப் பெற்றுவருகிறது. மேலும், இந்த அழைப்புகள் அனைத்துமே தனியார் மருத்துவமனைகளிடமிருந்து மட்டும்தான் வருகிறது என்றார் ஒரு 104 வாடிக்கை மைய சேவை அதிகாரி.
"எந்த ஒரு ஆக்சிஜன் பற்றாக்குறை சம்பந்தமான அழைப்பும் சென்னை அரசு அல்லது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலிருந்து வரவில்லை. இந்த அழைப்புகள் அனைத்தும் வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வருகின்றன" என்றார்.
இது பற்றி எம். செல்வகுமார், மாநிலத் தலைமை அலுவலர், ஜிவிகே-இஎம்ஆர்ஐ (GVK- EMRI) 108 ஆம்புலன்ஸ் சேவை, நம்மிடம் தொலைபேசி வாயிலாகக் கூறுகையில், "ஆக்சிஜன் தொடர்பான அழைப்புகள் வருகிறது. அதிகமாக, இந்த அழைப்புகள் மற்ற மாவட்டங்களில் இருந்து வருவதால், அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்களைத் தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவிக்கிறோம். அதன்பிறகு, அலுவலர்கள் ஆய்வு செய்தபின் ஆக்சிசன் சிலிண்டர்கள் கொடுக்கப்படுகிறது" என்றார்.
சிலிண்டரின் விலை குறித்த கேள்விக்கு செல்வகுமார், "விலையை அரசு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்" என சூசகமாக தெரிவித்தார்.
டாக்டர் ஷாந்தி, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், மாநில செயலாளர், கூறுகையில், "தற்போது இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வரும் நாட்களில் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமை. தற்போது, நோயாளிகளுகளுக்கு தரமான உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் அவசரகால பணியாக ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் அழைப்பு மையத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி, மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற வகையில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்