சென்னை: கோவிட் 19 முன்களப் பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதம் செய்யாமல் அந்தந்த துறைத் தலைவர்கள் உடனடியாக வழங்க அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், 'கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு அந்நோய் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும் அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கும் தேர்வுகளில் முன்மொழிவுகள், தற்போது துறைத் தலைவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையரின் மூலமாக அரசுக்கு அனுப்பப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையிலிருந்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அந்தந்த துறைத்தலைவர்களின் முன்மொழிவுகளே போதும்
இனி வரும் காலங்களில், கரோனா இறப்பிற்கு நிவாரண நிதி வழங்க வரப்பெறும் முன்மொழிவுகளில், துறைத்தலைவர்களிடம் மேல் விவரம் கேட்டு, அவற்றை பெற்று அரசுக்கு மீள அனுப்ப ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறையினைச் சார்ந்த முன்களப்பணியாளர்களுக்கு, அந்தந்த துறைத் தலைவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட அரசின் நிர்வாகத் துறைகளே கையாளவும், அத்துறைகளே நிதித்துறையின் ஒப்புதலைப் பெற்று உரிய ஆணைகளை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ள முன்மொழிவுகளை இத்துறையே பரிசீலித்து உரிய ஆணைகளை வெளியிடும்.
மேலும் இவ்விவரங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பராமரிக்க வேண்டியுள்ளதால், நிதி உதவி வழங்கப்பட்ட விவரங்களை உடனுக்குடன் முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்குமாறும்; வெளியிடப்படும் அரசாணையின் நகல்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து நிர்வாகத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது’ என்று அக்கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!