சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட்டு ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக 9, திமுக மற்றும் அதிமுக தலா 3 வார்டுகளை கைப்பற்றின. இதில், 9 கவுன்சிலர்களின் உதவியால் மா.சேகர் என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் ஒரே ஒரு சேர்மனை அமமுக பெற்றிருந்தது. இவர் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் அமமுகவில் இருந்தார். இவர் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மா.சேகரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
அமமுகவின் ஒரே ஒரு பேரூராட்சி தலைவரை நீக்குவதற்கான காரணம் குறித்து தஞ்சாவூர் வட்டாரங்களில் விசாரிக்கும் போது, "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட போது தென்மாவட்டங்களில் ஒரு சில நகர்வுகளை மேற்கொண்டார். குறிப்பாக சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை நீக்கியதால் தென்மாவட்டங்களில் நாம் பின்னடைவை சந்திப்போம் என ஈபிஎஸ் அறிந்திருந்தார். இதனால் அமமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை கண்காணிக்கும் படி ஈபிஎஸ் மறைமுகமாக உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
முதலில் இதுப்படி தென்மாவட்டங்களில் அமமுகவின் முகமாக அறியப்பட்டவர் ஐயா துரைப்பாண்டியன். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கடையநல்லூர் தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். கட்சிக் காரர்கள் யாரும் தேர்தல் செய்யவில்லை என்று அதிருப்தியில் இருந்த ஐயா துரைப்பாண்டியன், திடீரென கோவில்பட்டி மாணிக்கராஜா மீதுள்ள அதிருப்தியில் அதிமுகவில் இணைந்தார். இதே வரிசையில் பல கட்சிகளை சேர்ந்த அதிருப்தியில் உள்ள முக்கிய புள்ளிகளை அதிமுகவில் சேர்க்க ஈபிஎஸ் திட்டமிட்டிருக்கிறார்.
ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் கடந்த சில மாதங்களாக அமமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக டிடிவி தினகரன் நண்பர் கோவில்பட்டி மாணிக்கராஜா மீது அதிருப்தியில் இருந்துள்ளனர். தென்மாவட்டங்களில் மாணிக்கராஜா எண்ணப்படியே அனைவரும் செயல்பட வேண்டும் என்ற சூழல் இருந்ததால் இந்த சமயத்தை பயன்படுத்தி கொண்டு அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு செல்லும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மன் மட்டும் அல்ல, அவருக்கு ஆதரவு தெரிவித்த 9 கவுன்சிலர்களும் அதிமுகவில் இணைய உள்ளனர்" என கூறினார்.
பேரூராட்சி சேர்மன் சேகர் நீக்கப்பட்ட நிலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரெங்கசாமியை தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரப்பூர்வமாக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதால் அமமுகவில் மட்டும் அல்ல, மற்ற கட்சிகளில் இருந்தும் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் இணையலாம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அவருடன் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் காமராஜ் உடன் இருந்தார்.