சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள்ளும் சரி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வெளியேயும் சரி, தி.மு.க. செய்த தவறுகளை, தமிழ்நாட்டிற்கு இழைத்த துரோகங்களை, புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவர் ஜெயலலிதா. உண்மையான புள்ளிவிவரங்களை அளித்தவர் ஜெயலலிதா. தவறான புள்ளி விவரங்களை அளித்தவர் கருணாநிதி.
இந்த உண்மைக் கூட தெரியாமல், அறியாமையின் காரணமாகவோ அல்லது கலைஞர் கருணாநிதியின் புகழ் பாட வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாகவோ தன் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரை அழைத்து ‘விவாதங்களை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிதான் நமக்கு முன்னோடி. அவர் ஒரு ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டும் என்றால், அனைத்து விபரங்களையும் கையில் வைத்தபடி பேசுவார். அதுபோல நீங்களும் எல்லாவிதமான புள்ளி விபரங்களுடன் விவாதத்தில் பங்கேற்க வேண்டும்’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக நேற்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தி.மு.க.வின் ஊழகுழலாக செயல்படுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. கச்சத்தீவு பிரச்சனையானாலும் சரி, காவேரி நதிநீர் பிரச்சனையானாலும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சனையானாலும் சரி, மாநில சுயாட்சி குறித்த பிரச்சனையானாலும் சரி, தி.மு.க.வின் குடும்ப ஆட்சியால் மக்கள்படும் அல்லல்களானாலும் சரி, அவற்றை மக்கள் முன் புள்ளி விவரங்களோடு எடுத்துவைக்கும் துணிச்சல் பெற்ற ஒரே தலைவர் ஜெயலலிதா. புள்ளி விவர முன்னோடி என்றால் அது ஜெயலலிதா அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அமைதிப் பூங்காவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தவர் ஜெயலலிதா. மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் தி.மு.க. பார்த்துக் கொண்டபோது, புள்ளி விவரங்களை, சட்ட நுணுக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, சட்டப் போராட்டத்தின்மூலம் அதில் வெற்றி கண்டவர் ஜெயலலிதா. இதற்காக "பொன்னியின் செல்வி" என்ற விருது டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது.
கச்சத்தீவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, அதற்கு ஆதரவாக அப்போதைய தி.மு.க. அரசால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டியவர் ஜெயலலிதா. 2G அலைக்கற்றை ஊழலை புள்ளி விவரங்களுடன் நாட்டு மக்களுக்கு படம் பிடித்துக் காட்டியவர் ஜெயலலிதா. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு குறித்த பிரச்சனையில் நாடாளுமன்றத்திற்குள் ஒரு நிலைப்பாடு, நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு நிலைப்பாடு என்ற தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டினை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஜெயலலிதா.
இலங்கையில் இனப் படுகொலை நடந்தபோது வேடிக்கைப் பார்த்த தி.மு.க.-வின் நிலையினை தோலுரித்துக் காட்டியதோடு இலங்கை அரசுமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி காட்டியவர் ஜெயலலிதா. கர்நாடக அரசு பல அணைகளை கட்டியபோது தி.மு.க. வேடிக்கைப் பார்த்ததை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புள்ளி விவரங்களுடன் விளக்கியவர் ஜெயலலிதா. மொத்தத்தில் புள்ளி விவரங்களின் முன்னோடி ஜெயலலிதா.
எது எப்படியோ, ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம்’ நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் துரோகச் செயல் தொடர்கிறது. தனது செயல்பாட்டின் மூலம் ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வெட்கக்கேடானது. இந்தத் துரோகக் கூட்டம் வீழும் நாள் வெகு தொலைவில் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.