சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணைக்காக இன்று (மார்ச்.21) நேரல் ஆஜரானார். இதேபோல, சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், "2016 செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்குத் தெரியாது. சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டதாகவும், அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன்.
விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார்? ஆணையம் அமைக்க முடிவு செய்தது ஏன் என ஆறுமுகசாமி ஆணையம் எழுப்பிய கேள்விக்கு. பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது என பதிலளித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவைப் பார்த்தேன் எனவும் அதற்குப் பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும அவர் கூறினார்.
ஜெயலலிதாவுக்குச் சர்க்கரை அதிகமாக இருக்கிறது என்பதைத் தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இதனிடையே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர், "சசிகலா மூலமாகக் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் அறிமுகம் ஏற்பட்டது. போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் தங்கி இருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ர் ஜெயலலிதா உடன் சிறைக்குச் சென்றேன். அப்போது அவர் உடல் நலக் குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். 2016 தேர்தலின் போதும் உடல் நலகுறைவாக இருந்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக் கொண்டார்.
நான் தினமும் சென்று பார்த்து வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவைப் பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாகத் தான் பார்த்திருக்கிறேன். என்ன வகையான சிகிச்சை வழங்கப்பட்டது என்பது எல்லாம் சசிகலாவிற்குத் தெரியும் என இளவரசி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.