சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமித்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக மாபெரும் இயக்கம். கடந்த 7 மாதங்களாக அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும், பொது மக்களும் அறிவர். தொண்டர்கள் எண்ணப்படி நாங்கள் இந்த கூட்டத்தைக் கூட்டி உள்ளோம். இதில் முழுமையாக நாங்கள் வெற்றி பெற்று உள்ளோம். தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கம் தான் உள்ளார்கள்.
அதிமுக தான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி, எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும். தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற சட்ட விதிகளின்படி வழங்கும் தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னமும் கட்சியும் எங்களுக்கு தான் கிடைக்கும். விரைவில் முறையாக பொதுக்குழு நடைபெறும், அதற்கான அறிவிப்பு வரும்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு, அவர்கள் செய்யும் தவறை ஒவ்வொரு நாளும் சுட்டி காட்டும் ஒரே இயக்கம், அதிமுக. அதை நான் முறையாக செய்து கொண்டு இருக்கிறேன். சசிகலா என்ன அரசியல் கட்சியா வைத்துள்ளார்கள். இயக்கத்தை காப்பாற்றியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து செயல்படுவோம்.
கட்சி நிதியை கையாடல் பண்ணினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். யார் இந்த கட்சியை தலைமை ஏற்று நடத்தினார்கள் என்று தொண்டர்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தான் இந்த தகுதி இருக்கிறது என தொண்டர்கள் முடிவு எடுப்பார்கள். எங்கள் நம்பிக்கை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்கள் தான். அவர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். தற்போது திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், அதிமுக வரலாற்றில் இது போன்ற கேவலமான ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இல்லை.
அதிமுக கட்சி தொண்டர்கள் மற்ற கட்சிகளுக்கு இதுவரை செல்லவில்லை. மக்கள் அவர்களை(எடப்பாடி தரப்பினர்) புறம் தள்ளி துரத்தி அடிப்பார்கள். அதிமுகவை யாராலும் விழுங்க முடியாது. குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து அழைப்பு வந்தது. பின் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்கள். அதன் பேரில் தான் நான் சென்றேன். முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் எனக்கு குஜராத்தில் உரிய மரியாதை தரப்பட்டது. முதலில் நான் கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். பிறகு மேடையில் முன் வரிசையில் என்னை அழைத்துச்சென்று அமர வைத்தார்கள்.
அமித்ஷா Where is OPS என்று கேட்டார். பின்பு தான் நான் சென்று அவரை பார்த்துப்பேசினேன். நன்றாக இருக்கீங்களா என கேட்டார். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித்தலைவர் என்ற முறையில் G20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருப்பார்கள்.
பாஜக சார்பில் டெல்லியில் தங்களுக்கு அனுப்பப்பட இருந்த அழைப்பிதழை தம்பிதுரை மூலம் எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டு, ஜி 20 மாநாட்டில் பங்கு பெற்றதாக கூறுகின்றனர். எங்களுக்கு பாஜக உரிய மரியாதையை தருகிறது. நாங்களும் அவர்களுக்கு உரிய மரியாதையை தந்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த கட்சி இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் சி.வி.சண்முகம் தான். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்!