சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில், 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சியில் திமுக 134 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. 489 பேரூராட்சிகளில் திமுக 435 இடங்களையும், அதிமுக 16 இடங்களையும் பிடித்துள்ளது.
1,373 மாநகராட்சி வார்டுகளில் திமுக 1,100 இடங்களையும், அதிமுக 164 இடங்களையும் வென்றுள்ளது. 3,842 நகராட்சி வார்டுகளில் திமுக 2,631 இடங்களையும், அதிமுக 639 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
7,604 பேரூராட்சி வார்டுகளில் திமுக 4,958 இடங்களையும், அதிமுக 1,215 இடங்களையும் வென்றுள்ளது.
![அதிமுக தலைமை ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் - ஓபிஎஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-ops-byte-visual-script-7208368_23022022145738_2302f_1645608458_0.png)
இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம்.
உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து அதிமுக தலைமை ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்" எனக் கூறினார்.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வெளிட்ட அறிக்கையில், "உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது.
அதிமுக உடன்பிறப்புகள் எவ்விதமான தொய்வுமின்றி, எப்போதும்போல் கழகப்பணியை மேற்கொள்ளவும், மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே மறுபடி வெல்லும். மக்கள் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும்.
நடந்து முடிந்த தேர்தல் மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பே அல்ல. நேர்மையாக தேர்தல் நடந்திருந்தால் அதிமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கும்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.