சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓபிஎஸ் அணியினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கலந்து கொண்டுள்ளனர். முதல்முறையாக ஓபிஎஸ் அணியும் அமமுகவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதால் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய ஜெயக்குமார், “டிடிவி தினகரன் ஒரு மாய மான். ஓபிஎஸ் அவர்களே டிடிவி தினகரனை ஒரு 420 என்று கூறியவர். இருவரும் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுக தொண்டர்களால் நிராகரிக்கப்பட்ட ஓபிஎஸ் அவரது செயலை யாரும் நம்ப மாட்டார்கள். ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர்.
டிடிவி தினகரன் ஆகியோர் திரை மறைவில் ஈபிஎஸ் ஆட்சியைக் கவிழ்க்க பல்வேறு சதிகளை செய்தார்கள். சந்தர்ப்பவாதி ஓபிஎஸ்யின் சந்தர்ப்பவாதத்தை தொண்டர்கள் உணர்ந்துள்ளனர். இன்று நாடகத்தை அரங்கேற்ற கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். ஓ.பி.எஸ் ஆர்ப்பாட்டம் ஒரு நாடகம். ஈபிஎஸ் ஆட்சியில் கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் கரோனா காரணமாக வழக்கு காலதாமதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடரும் - தமிழக காவல்துறை டிஜிபி சபதம்; என்கவுன்ட்டருக்குப்பின் பேட்டி!
பின், திமுக ஆட்சி வந்தது மேற்கு மண்டல ஐஜி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 90 சதவீத விசாரணை முடிக்கப்பட்டு சுமார் 800 பக்கத்துக்கும் அதிகமாக அருகே சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒரு கீழ்மட்ட காவல்துறை அதிகாரியின் பொறுப்பில் மீண்டும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஐஜி தலைமையில் நடைபெற்ற விசாரணையை குறைந்த பதவியில் உள்ள அதிகாரி தலைமையில் மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளோம். அதை தான் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சொல்லியுள்ளார். கோடநாடு பங்களா ஜெயலலிதாவும் சொந்தமானது இல்லை, அது தனியாருக்குச் சொந்தமானது. அதை முகாம் அலுவலகமாக பயன்படுத்தினர். அந்த இடத்தை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோர் கைபற்ற முயல்கின்றனர். அதிமுக போராட்டம் நடத்த அனுமதி கேட்டால், திமுக அரசு கொடுப்பது இல்லை.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் தருகிறார்கள். இருவரும் திமுகவின் செல்லமான பிள்ளைகள். கோடநாடு குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாராளர்களாக திமுக வழக்கறிஞர்கள் செயல்பட்டனர். குற்றவாளிகளைப் பாதுகாக்க திமுக செயல்படுவது ஏன்?. கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் பயன்படுத்தியுள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும். 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெற 1008 நிபந்தனைகளை திமுக அரசு விதித்துள்ளது. பல்வேறு வரிகளாலும் காவல்துறைக்கு டார்கெட் வசூல் செய்வதாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Trichy: கோடநாடு கொலை கொள்ளை: உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்: ஓபிஎஸ் - அமமுகவினர் ஆர்ப்பாட்டம்!