சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவில் ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்களை ஈபிஎஸ் நீக்கினார். அப்போது இருந்து அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது ஓபிஎஸ் தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். ஈபிஎஸ் தரப்பினர் ஓபிஎஸ்சை நீக்கி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமனம் செய்தனர். இதற்கு ஈபிஎஸ் தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று சபாநாயகர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தனர்.
சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகிய இருக்கைகள் மாற்றம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு கொறாடாக்கள் கொடுத்த கடிதம் தனது ஆய்வில் உள்ளது. அதிமுக விவகாரத்தில் சட்டப்பேரவை தலைவராக என்னுடைய கடமையைச் செய்வேன் என சபாநாயகர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஈபிஎஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து சபாநாயகரிடம், ஓபிஎஸ்சை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கூறிக்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் சபாநாயகர் முடிவு எடுக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினரிடம் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓபிஎஸ், சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவு தான் இறுதியானதாக பார்க்கப்படும். ஒரு வேளை ஓபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்று சபாநாயகர் செயல்பட்டால், ஈபிஎஸ் தரப்பில் உள்ள 61 அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை நிகழ்வைப் புறக்கணிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆ.ராசா வருமானத்தை விட 579 விழுக்காடு அதிகமாக சொத்து சேர்த்தார் - சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்