சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு இன்று சைக்கிளில் வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ராமசாமி, “மிக மோசமான நிலைமையில் தமிழகம் இருக்கிறது. ரூ.5.7 லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு உள்ளது. 2 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை திசை திருப்பும் வகையில் அறிவிப்புகளை அரசு வெளியிடுகிறது. அறிவிப்புகளில் காட்டும் ஆர்வத்தை அதனை செயல்படுத்துவதில் காட்டுவதில்லை. எனவே, இக்கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர், தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் உயர்ந்திருப்பதால் மாநில அரசு கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிதிநிலை அறிக்கையை கவர்ச்சிகரமாக அறிவிக்க மட்டுமே இந்த அரசு செய்யும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.